வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card): நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

 

report-card

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card): நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

மதிப்பீட்டு அட்டை (Report Card)

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

UNITED NATIONS, GENEVA, February 28, 2018 /EINPresswire.com/ —

மனித உரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யும் செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card) ஒன்று வெளியிடப்பட இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை எதிர்வரும் மார்ச் 21ம் நாளன்று சபைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முன்னராக தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்த நா.கடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் மானிட விரோதக் குற்றங்களால் பாதிப்புற்றவர்களுக்கு நீதி வேண்டும் கோரிக்கை ஒன்றினையும் விடுத்திருந்தது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது : உலகெங்கிலும் மனித உரிமைகளைக் காக்கவும் மேன்மைப்படுத்தவும் இந்த அமர்வு உதவும் என்று நம்புகிறோம். குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் இந்த அமர்வு ஆக்கவழிப்பட்ட, பொருள்பொதிந்த நடைபடிகள் எடுக்கும் என்றும் எதிர்ப்பார்க்கிறோம். மியான்மரில் ரோகிங்க்யா முதல் இலங்கைத்தீவீல் தமிழர்கள் வரை, சிரியா வாழ் மக்கள் முதல் ஏமன் வாழ் மக்கள் வரை அனைவரும் மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகளிலிருந்தும் முடிவுகளிலிருந்தும் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது சனநாயகம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புலம்பெயர் சிறிலங்கத் தமிழர்கள் ஏற்படுத்தியுள்ள ஓர் அரசியல் அமைப்பு ஆகும். இலங்கைத்தீவின் ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற அனைத்துலக குற்றங்களுக்கு, அதாவது போர்க் குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் இனவழிப்புக் குற்றத்துக்கும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும்.

மனித உரிமைப் பேரவை 2015ம் ஆண்டும் 2017ஆம் ஆண்டும் முறையே 30/1, 34/1 தீர்மானங்கள் இயற்றியது.

ஆனால் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் 2018 சனவரி 25ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது ‘நிலைமாற்ற நீதிக்கு ஒரு முழுவிரிவான திட்டமும் அதன் செயலாக்கத்துக்கு வரையறுக்கப்பட்ட காலவரிசை தேவை என்ற போதிலும், இப்படி எதுவும் இது வரை வெளிப்படுத்தப்படவும் இல்லை, இது குறித்துக் கலந்தாய்வும் இல்லை. மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையரின் மேலும் கூறியது: ‘அனைத்துலகச் மனித உரிமைச் சட்டம் கொத்தாக மீறப்பட்டதும் அவமதிக்கப்பட்டதும், பன்னாட்டு மனித நேயச் சட்டம் கடுமையாக மீறப்பட்டதுமான நேர்வுகள் தண்டிக்கபடாத குற்றங்களாகவே இருப்பதைக் கவனித்து ஆவன செய்யும் திறனோ திடசித்தமோ தமக்கிருப்பதாக ஆட்சியாளர்கள் இது வரை காட்டவில்லை.’

சிறிலங்காவின் அரசுத் தலைவரும் தலைமை அமைச்சரும் மனித உரிமைப் பேரவைக்குத் தாங்களே அளித்த உறுதிகளைத் திரும்பத் திரும்ப மறுதலித்துள்ளார்கள், வெளிப்படையாகவே மறுதலித்துள்ளார்கள். சிறிலங்காவின் அதிபர் தலைவர் மைத்ரிபால சிறிசேனா அல் ஜசீரா செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 2009ம் ஆண்டு அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசுப் படைகள் போர்க்குற்றமே செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

நவம்பர் 11 2017ல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் 350 இராணுவீரர்கள் முன்னிலையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரிபால கூறுகையில் ‘சில குழப்பம் அடைந்த அரசியல்வாதிகளும், சில இழைப்பாறிய இராணுவ அதிகாரிகளும் போர் கதாநாயகர்களும் விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.இந்த நாட்டு அதிபர் என்ற வகையில் வெளிநாட்டு நீதிபதிகளின் முன் எவரையும் விசாரணக்கு இட்டுச் செல்லப் போவதில்லை என கூறியுள்ளார்.

இவ்வாறு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உண்மைகளை மறுத்து உலகை ஏமாற்றும் போக்கைக் காட்டியுள்ள நிலையில், அந்த நாட்டை இன்னும் ஓராண்டுக்காலம் பேரவையின் பார்வையில் வைத்துக் கொண்டிருப்பதால் பயன் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சிறிலங்காவை மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது மனித உரிமை தொடர்பில் அந்நாடு எவ்வளவு கொடிய வரலாறும் நிலைப்பாடும் கொண்டுள்ளது என்பதைத் தொடர்ந்து வெளிச்சத்தில் வைத்திருக்கும் என்பது மெய்தான். ஆனால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க இது வழிகோலாது. இதனைக் கருத்தில் கொண்டு மனித உரிமைப் பேரவை உரியமுறையில் முறையில் செயற்படும் என நம்புகிறோம்.

வட கொரியாவை ஐ.நா பாதுகாப்புச் சபை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு பரிந்துரைத்தது போன்றும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கருத்தப்படுகின்ற நபர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கின்ற நடவடிக்கைளை கொண்டு வரவேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
About Tamil Diaspora News.com 204 Articles

ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*