கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

tgte-logo5மனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியுள்ளதோடு, பல ஆயிரம் பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில், இப்பெரும் நோய்தொற்றுக்கு எதிராக முன்முனைப்புக்களில் ஆதரிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த துயரக் கணக்குகள் ஒவ்வொன்றும் நாள்தோறும் ஏறிச்செல்லும் நிலையில், சில காலமாகப் அனைத்துலக சமூகத்திடையேயான உறவுகளில் காணப்படாத நாடுகளைக் கடந்த தோழமை பெரமளவு முக்கியத்துவம் உடையதாகிறது. ஒவ்வொரு அரசுகளுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளினால் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றைய நெருக்கடியை வெல்லப் பன்னாட்டு சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

எப்படியானாலும், தனிமனிதர்கள் என்ற அளவில் தோழமையின் ஆற்றலைக் காண முடிகிறது. சமூக விலகல் நம்மை உடலளவில் பிரித்து வைத்திருந்தாலும் உலகெங்கும் மக்கள் தோழமையுடன் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். முதலில் கொரோனாவை எதிர்நிற்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் மற்ற அனைவரும் இந்த அனைத்துலக நெருக்கடியின் முனையில் முகம்கொடுத்து முன்நிற்கின்றார்கள்.

இந்த உணர்வின் பாற்பட்டுத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொரோனாவின் புதிவித நோய்க்கிருமிக்கு எதிரான போரில் உலகெங்கும் இருக்கும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு முழு ஆதரவினையும் தோழமையினையும் வழங்குகின்றது. உலகெங்கும் பணியாற்றி வரும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நெஞ்சம்நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது. பிறர் உயிர்காக்கத் தம்முயிர் கருதாமல் உழைத்திடும் இவர்கள் ஆகச் சிறந்த மானிடத்துக்கும் மனிதநேய இலட்சியங்களுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆவர்.

பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் பிற தெற்காசிய நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு நிதியம் தோற்றுவிக்க இந்திய அரசு எடுத்துள்ள முன்முயற்சியையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. உயிர்களைக் காக்கவும் இப்பிராந்திய மக்களை இன்னுங்கூட நெருக்கமாக ஒன்றுசேர்ப்பதற்கும் இது அருமையானதொரு மனிதநேய சமிக்ஞை ஆகும்.

இந்தப் பின்னணியில் கொவிட்-19 பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் முறியடிக்கவுமான முயற்சிகளில் முழுமையாகப் பங்கேற்கும்படி உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. கொவிட்-19க்கு எதிரான போர்முனைகளில் மேற்கொள்ளபப்டும் முயற்சிகளுக்குத் தனித்தனியாகவோ கூட்டாகவோ நிதிசேர்த்தும், தன்னார்வத் தொண்டர்கள் திரட்டியும் துணைபுரிந்து வரும் பற்பல தமிழர்களையும், தமிழர் அமைப்புக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகின்றது.

இந்த நெருக்கடி ஏழை எளிய மக்கள் மீது கூடுதலான தீவிளைவேற்படுத்தி வருகிறது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது. ஆகவே அரசுகள் தம் மக்களிடையே திடீர் வேலையின்மை அல்லது வருமான இழப்பால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்ற பொருளியலாக மிகவும் நலிந்த பிரிவினரின் நலனை உறுதி செய்ய உடனடி நடைபடிகள் எடுக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. குடிபெயர்ந்தோரும், வீடற்றோரும், முன்கூட்டியே உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைகளுடன் இருப்போரும் கூட தனிக் கவனத்துக்குரியோரே, அவசரமாக!

இந்தக் கட்டத்தில் முழு அடைப்புகள், ஐயத்துக்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட கொவிட்-19 நோயாளர்களைத் தனிமைப்படுத்தி வைத்தல் போன்ற நோயடக்கும் வழிமுறைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவான ஆதரவு வழங்கிய போதிலும், அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் படியான வழிமுறைகளைக் கண்டிப்பாகச் செயலாக்கும் படியும் அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. மேலும், மதம், மரபினம், இனக்குழு, பாலினம், குடிவரவுத் தகுநிலை, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்கள்பிரிவுகளை அரசுகள் முனைந்து பாதுகாக்கும் படியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

உலகம் இன்று சந்திப்பது போன்ற ஒரு நெருக்கடி மானிடத்தில் உன்னதமானவற்றை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அச்சத்தினாலோ கவலையினாலோ அதிகாரத்தினாலோ அரசியல் உள்நோக்கங்களினாலோ விருப்புவெறுப்பினாலோ சிலரிடத்தில் படுமோசமானவற்றையும் வெளிப்படச் செய்யக் கூடும். மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவோரை அரசுகள் பொறுப்புக்கூறும் படிச் செய்யத்தான் வேண்டும். கொவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது அவசரத்திலும் அவசரமான ஒன்று என்னும் போதே, அதனைச் சாக்கிட்டுத் தண்டனையச்சமின்றிக் குற்றம் புரிய அனுமதிக்க முடியாது.

விரிந்து அகன்ற, ஜனநாயகப்புறம்பான அதிகாரங்கள் பெறவும் தனிமையுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்ப்டை உரிமைகளை மீறவும் சில அரசுகள் பெருந்தொற்று நோயைப் பயன்படுத்திக் கொள்வதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனப்படுத்துகிறது, கண்டிக்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் இடைக்காலக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் சி.டி. விக்ரமரத்னா அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருப்பது என்னவென்றால் சமூக ஊடகங்களில் அரசு அதிகாரிகளைக் குறைகூறும் ஆட்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் அது அரசாங்கத்தின் கடமைகளுக்கு இடையூறு செய்வதாம்!

இந்த வகையில், சில அரசுகள் கட்டி வைத்துள்ள தணிக்கைக் கொள்கைகளை மதியாமல் கடமையின் தேவையையும் கடந்து உயிரைப் பொருட்படுத்தாமல் உலகெங்கும் செயல்பட்டுள்ள சுகாதாரத்துறைப் பணியாளர்களை அறிந்தேற்று அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. பெருந்தொற்று நோய்க்கான நாட்டின் மறுவினைகள் பற்றிய பொய்க் கதைகளை மறுத்து ஊடகங்களிடம் பேசுவது உயிருக்கு ஆபத்தானது அல்லது சிறைக்குள் தள்ளக்கூடியது என்று தெரிந்தே இப்படிச் செய்திருப்பது வீரச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். தகவலுக்கான அடிப்படை உரிமையையும் தெரிந்து கொள்ளும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ அறம் காக்க ஹிப்போக்கிரட்டிஸ் எழுதிய உறுதிமொழியில் இல்லை என்றாலும், நல்வாழ்வுப் பணியாளர்கள் பலரும் தம்மைத்தாமே இந்த உரிமைகளின் காவலர்களாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்தப் பெருந்தொற்று நோய் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தபடப்ட மர்சல் உதவித்திட்டம் உலக ஒழுங்கில் மாற்றங்களை கொண்டுவந்தது போலவே, (செப்ரெம்பர் இரட்டைக் கோபுரத்தாக்குதல்) 9-11 பன்னாட்டு உறவுகளையும் பன்னாட்டுச் சட்டத்தையும் என்றென்றைக்குமாக மாற்றி விட்டது போலவே, கொரோனாவுக்கு முன் வாழ்க்கை, கொரோனாவுக்குப் பின் வாழ்க்கை என்று காலத்தைப் பிரிக்கும் நாள் வரும். நெருக்கடிநிலைகளில் அரசுகள் எடுத்துக் கொண்ட விரிந்தன்ற அதிகாரங்களை இந்த மாற்றத்தைப் பயன்படுத்தி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். எடுத்துக்காட்டாக இணைய வழித் தொடர்பாடல் வாழ்க்கையில் முதன்மை இடம் பெறும் என்பதால் இணைய சுதந்திரத்தைப் பாதுகாத்தாக வேண்டும்.

இன்று பற்பலருக்கும் இடையே நாம் காணும் தோழமை நீடித்து நிலைக்கும் மாற்றங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Murugiah Suginthan The Secretariat,TGTE

join us : Website: http://tgte.org/tamil Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/ Twitter: @suginthan Twitter: @TGTE_SEC G+: https://plus.google.com/u/0/+TGTESecretariat

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*