குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு …..

 
tgte-logo5
குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நாவுக்கு இருக்கிறது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நாவுக்கு இருக்கிறது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் “தற்போதைய தீர்மானத்தை மீண்டும் காலஅவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது, நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயல்”

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 17, 2018 /EINPresswire.com/ —

“1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய, சிறிலங்கா விவாகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நாவுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்ற தீர்மானத்தின் உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மாறாக தற்போதைய தீர்மானத்தை மீண்டும் காலஅவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது, நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயல்மட்டுமன்றி, அறத்துக்கு புறம்பான சிறிலங்கா அரசின் நடைத்தையை அங்கீகரிப்பதாக மாறிவிடும்” கொழும்பில் இருந்து வெளிவரும் ஞாயிறு தினக்குரலுக்கு( sep 15-2018) வழங்கிய செவ்வியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன்வடிவம்:

1) கேள்வி : சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் கால அவகாசத்துடன் கூடிய மற்றுமொரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்;று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய பார்வை என்ன ?

பதில் : எதிர்வரும் 2019 மார்ச் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அது எத்தகைய உள்ளடக்கத்தை கொண்டிருக்கப் போகின்றது என்பதில்தான் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஐ.நாவை நோக்கிய 1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய, சிறிலங்கா விவாகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நாவுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்ற தீர்மானத்தின் உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மாறாக தற்போதைய தீர்மானத்தை மீண்டும் காலஅவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது, நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயல்மட்டுமன்றி, அறத்துக்கு புறம்பான இலங்கை அரசின் நடைத்தையை அங்கீகரிப்பதாக மாறிவிடும்.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றினை ஐ.நாவில் கொண்டுவருவதற்குரிய அழுத்தங்களை, ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு தமிழர் தரப்பு ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும்.

2) கேள்வி : சிறிலங்காவை சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டுமெனில், காலஅவகாசம் அவசியமானது என ஓரு தரப்பினர் கூறுகின்றனர். இதற்கு தங்களின் மாற்று வழி இருக்கின்றதா ?

பதில் : நிச்சயமாக. சிறிலங்கா அரசினைப் பொறுத்தவரை ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காரணம் சிறிலங்கா சிங்கள பௌத்த இனவாத அரச க்கட்டமைப்பைக் கொண்டது(ethonocratic state) . தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் ஊடாக அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான வழி இருக்கின்றது. பொறுப்புக்கூறல் தவிர்ந்த பிற விவகாரங்களை ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாள்வதற்குரிய ஏற்பாட்டை காணலாம். இதற்கு ஒரு சரியான கால அட்டவணையை போட்டு அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம். அதுதவறு நிலையில், பயணத்தடைகள், சொத்து முடக்கங்கள் போன்ற தண்டனை அழுத்தங்களை பிரயோகிக்கலாம். உதாரணத்துக்கு பலஸ்தீன விவகாரம், ஐ.நா பாதுகாப்பு சபையிலும், ஐ.நா மனித உரிமைச்சபையிலும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே ஐ.நா மனித உரிமைச்சபைக்குள் மட்டும் சுழன்றுகொண்டிருந்தால், அது தமிழ் மக்களுக்கான நீதியின் தேடலை நீர்த்துப் போகச் செய்வதோடு, பொறுப்புகூறலில் இருந்த சிறிலங்காவை காப்பாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது.

3) கேள்வி : சமீபத்தில் மியான்மார் விவகாரத்தில் ரொகிங்கிய மக்கள் மீதான பாரிய மனித உரிமை மீறல் விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதனை சிறிலங்கா விவகாரத்தோடு எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் ?

பதில் : இது வரவேற்கத்தக்க ஒன்று. மியான்மார் விவகாரத்துக்கென நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு போல்தான், சிறிலங்கா விவகாரத்துக்கும் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது நடந்தேறிய பாரிய குற்றங்கள் தொடர்பில் அக்குழு பட்டியலிட்ட விடயங்கள் ஒரு இனப்படுகொலைக்குரிய கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் வெளிப்படையாக இனப்படுகொலை என அக்குழு தெரிவிக்கவில்லை. இன்று இந்த நிபுணர் குழு மியான்மாரில் ஒரு இனப்படுகொலை நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது. தமிழர்கள் விடயத்தில் இனப்படுகொலை எனச் சொல்ல அனைத்துலக சமூக பின்நிற்பதன் பின்னால் பூகோள நலன்சார் அரசியல் காணப்படுகின்றது.

இத்தகையதொரு புறச்சூழலில்தான் மியான்மார் விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம். ஒப்பீட்டளவில் மியான்மாரைவிட நாம் கொடுத்த விலை என்பது பெரியது.

4) கேள்வி : நிறைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட மாகாண சபையில் முக்கியமான இரண்டு விடயங்களை உள்ளடக்கி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும், மற்றயது அரசியற் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தொடர்பில் தங்களின் பார்வை என்ன ?

பதில் : நாம் இதனை முழுமையாக வரவேற்கின்றோம். தீர்மானத்தை சபைக்க கொண்டு வந்திருந்த உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும், மற்றும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கும் எமது நன்றியும், பாராட்டும்.

இத்தீர்மானம் தாயக மக்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளது. இதே நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டுள்ளோம் என்பது மட்டுமன்றி, அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றோம்.

இந்நிலையில் தாயகமும், புலமும் ஒற்றைக்குரலாக ஒரே நிலைப்பாட்டில் ஒலிப்பதானது, தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது என்பது மட்டுமன்றி, இந்தியப் பெருங்கடல் மூலோபாய அரசியலில், தமிழர்கள் ஒரு தரப்பாக மட்டுமன்றி தவிக்க முடியாத ஒரு சக்தியாகவும் இருப்பர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*