ஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா ?

 

catalonia-referendum

ஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !!

கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்பு

தமிழீழ மக்கள் பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாக தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களின் முன்வைக்கப்பட்டு பொதுவாக்கெடுப்பில் மக்களின் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும்”— வி.உருத்திரகுமாரன் TORONTO , CANADA , April 17, 2018 /EINPresswire.com/ —

இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு (Referendum)ஒன்று சாத்தியமா என்ற கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமான் பதில் அளித்துள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம். இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது.

“ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும். நிலைமாறுகால நீதி தொடர்பாக சிறிலங்காவின் கபடடும், இந்து சமுத்திரத்தில் இன்று உருவாகிவரும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளும், ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதுவான அரசியல் சூழலை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களாக அமைகின்றன. அத்தகைய ஒரு அரசியற் சூழலில் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வகையிலான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக் கூடியதாக இருக்கும். அதுவரை எமது சுதந்தரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்” என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயகத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவில் ஞாயிறன்று இடம்பெற்றிருந்தது.

இதில் காணொளிவாயிலாக உரையாற்றியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையின் முழுவடிவம்:

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இன்றைய பொது வாக்கெடுப்புக் கோரும் மக்கள் அரங்கம் அமைகிறது.

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொது வாக்கெடுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாக தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு தமிழீழ மக்களின் முன்வைக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் தமது கையில் எடுத்துத் தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ள வேண்டும் என்பதே அச் செய்தியாகும்.

தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைக் கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்தியாக வேண்டும்.

இவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6வது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்ள முடியும்.

இத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பு நடாத்துவதன் நடைமுறைச் சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.

ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம். இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும். நிலைமாறுகால நீதி தொடர்பாக சிறிலங்காவின் கபடடும், இந்து சமுத்திரத்தில் இன்று உருவாகிவரும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளும், ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதுவான அரசியல் சூழலை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களாக அமைகின்றன. அத்தகைய ஒரு அரசியற் சூழலில் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வகையிலான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக் கூடியதாக இருக்கும். அதுவரை எமது சுதந்தரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்»

இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்பரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*