ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது? கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

 
tgte-logo5
ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது? கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை சிக்கவைக்கும் முயற்சிக்கு தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இங்கே ‘யதார்த்தம்’ என்ற சொல்லாடல் சமாகாலத்தில் தமிழ் சமூகத்தின் மத்தியில் உச்சரிக்கப்படுகின்ற ஒரு பேசு சொல்லாக மாறியுள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் ‘தமிழீழம்’ ,’போராட்டம்’ பற்றி பேசுபவர்களை ‘யதார்த்தம்’ புரியாதவர்கள் என்று ஒரு தரப்பினர் கூறுவதும், இலங்கைத்தீவில் இருந்து ‘தமிழ் தேசியம்’ பற்றி பேசுபவர்களை யதார்த்தம் புரியாமல் ‘அரசியல் செய்கின்றார்கள்’ என்ற கூறுபவர்களும் காணப்படுகின்றனர்.

இங்கே ‘யதார்த்தம்’ என்பதனை எந்த புள்ளியில் இருந்து நோக்குகின்றார்கள் என்பதில்தான் அதன் ‘உண்மை’ உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களதேசம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டமையினைத்தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையாக நாம் கொள்ள வேண்டும்.

சிங்கள தேசத்தின் மேலாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகளை பிரித்தானியர் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறும் காலத்திலேயே தமிழர் தலைமைகள் நிராகரித்திருக்க வேண்டும்.

தமிழர் இறைமையினைத் தமிழர்களிடமே விட்டுச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்திய விடுதலைப் போராட்டம் இழந்த தமிழரின் இறைமையினைத் தமிழர் தம் கைகளில் மீளப் பெறும் சாதனையை நிகழ்த்தியது.

இதேவேளை, தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் நடைமுறை அரசு அமைக்கப்பட்டது.

ஆனால் இலங்கைத்தீவினை ஒரு அரசாகப் பேணுவதே தமது புவிசார் மற்றும் பூகோள நலன்களுக்கு உகந்தது எனக் கணிப்பிட்ட உலகின் பலமிக்க அரசுகளுடன் சிங்கள அரசு கூட்டுச் சேரந்து நடைமுறைத் தமிழீழ அரசினை சிதைப்பதில் வெற்றிகண்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.