மன்னார் புதைகுழி விவகாரத்தில் பகுப்பாய்வாளர்களை அனுப்புக : ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

 
மன்னார் புதைகுழி விவகாரத்தில் பகுப்பாய்வாளர்களை அனுப்புக : ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

மன்னார் புதைகுழி விவகாரத்தில் பகுப்பாய்வாளர்களை அனுப்புக : ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுத்துப் பகுத்தாயும் செயல்வழியையும், நீதிச் செயல்வழி உட்பட இதனோடு தொடர்புள்ள அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிக்க கோரிக்கை

NEW YORK, UNITED STATES OF AMERICA, February 4, 2019 /EINPresswire.com/ —

தமிழர் தாயகத்தின் மன்னாரில் புதைகுழியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் விவகாரத்தில் ஐ.நா, தனது பகுப்பாய்வாளர்களை அதனை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் மாண்பு மிசேல் பச்சலே அம்மையாhர் அவர்களுக்கு நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றினை எழுத்தியுள்ளார்.

இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் சிறிலங்கா அரசு, சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எலும்புக் கூடுகள் உட்பட சேகரிக்கப்படும் சான்றுகள் அனைத்தையும், புதைகுழி இடம்பெற்ற பகுதியையும் எதிர்காலப் பன்னாட்டு வழக்குத் தொடுப்புக்குச் சான்றாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பகுத்தாய்ந்து, அழியாது காத்திட ஆவன செய்யுங்கள் என ஐ.நா ஆணையாளிரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலும்புக்கூடுகள் உட்பட சேகரித்த சான்றினைப் பத்திரமாக வைத்துகொள்ளச் சொல்லி சிறிலங்கா அரசாங்கத்திடமே விட்டுவைக்க அனுமதிப்பதும், அரசாங்கம் சான்றுகளை சிதைக்காமலோ அழிக்காமலோ வைத்திருக்கும் என்று எதிர்பார்ப்பதும் மிக மிக ஆபத்தானது எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஏராளமானோரைக் காணாமற்செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு சான்றுகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுத்துப் பகுத்தாயும் செயல்வழியையும், நீதிச் செயல்வழி உட்பட இதனோடு தொடர்புள்ள அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிக்கும் படி ஐ.நா ஆணையாளரிடம் அவசர கோரிக்கையினை நர்டுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தின் முழுமையான பகுதி:

அண்மையில், இலங்கையின் வடபுலத்தில் மன்னாரிலல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாரிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். இந்தப்பாரிய புதைகுழியில் இதுவரை 12 அகவைக்குட்பட்ட 23 குழந்தைகள் உட்பட 300 பேரின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலரைக் கட்டிப் போட்டு படுகொலை செய்திருப்பது போல் தெரிகிறது.

உடலங்களைக் கல்லறையில் போல் அருகருகே வரிசையாக அடக்கம் செய்யாமல் குவித்துப் போட்டுப் ‘புதைத்து’ முடித்திருப்பதும் காண முடிகின்றது.

குறித்த இப்பகுதி போர்க் காலத்தில் சிறிலங்கப் அரச படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், அருகில் உள்ள ஒரு கட்டடத்தில்தான் இராணுவ உளவுத்துறையின் தளம் இருந்துள்ளது என்றும் ; உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

பத்தாண்டு முன்பு போர் முடிந்து விட்டது என்றாலும் இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் பெருந்தொகையான சிறிலங்கா அரச படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் சான்றுகளைச் சிதைக்கக் கூடும் என்ற கவலைகள் உள்ளன. சிறிலங்கா படையினர் பலரும் ஆட்களைக் காணாமற்செய்தல், கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய குற்றங்கள் புரிந்திருப்பதாக ஐநா மற்றும் பல்வேறு வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதான பல அறிக்கைகள் உள்ளன. 2009 மே மாதம் போர் முடிவில் சிறிலங்கா அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட, நம்பிச்சென்ற ஏராளமானோரும் இதிலடங்குவர். பலர் குழந்தைகளோடும் சிறுவர் சிறுமியரும் உள்ளனர். இவர்களில் சிலர் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களோ என்று கவலை உள்ளது. குறிப்பாக 12 அகவைக்குட்பட்ட 23 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கவலைக்குரியவை. அவை போர்முடிவில் சிறிலங்கா படையினரிடம் நம்பிச்சென்ற குழந்தைகள், சிறுவர் சிறுமியரின் எலும்புக் கூடுகளாகவே இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள், அரசாங்கத் தரப்பிலான உரிமை மீறல்களை ‘இல்லை’ என்று மறுப்பதையும், பலவேளைகளில் விசாரணைகளுக்கு இடைஞ்சல் செய்வதும், சான்றுகளை அழிப்பது உட்படப் பன்னாட்டுக் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றவர்களாக காணப்படுகின்றனர்.

ஐநா மனிதவுரிமைப் பேரவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-1 தீர்மானத்தை, சிறிலங்காவும் பிற அரசுகளோடு சேர்ந்து கூட்டாக முன்மொழிந்திருப்பினும், அத்தீர்மானத்தின் கோரிக்கைகள ஈராண்டுக் காலத்தில் நிறைவேற்ற உறுதியளித்திருப்பினும், பன்னாட்டு நீதிபதிகளும் வழக்குத் தொடுநர்களும் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட அத்தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளைச் செயலாக்க மாட்டோம் என்று சிறிலங்காவின் குடியரசுத்தலைவரும் தலைமையமைச்சருமே திரும்பத் திரும்ப திட்டவட்டமாகப் பொதுவெளியில் கூறியுள்ளனர்.

அண்மையில், போர்க்குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் புரிந்ததாக ஐயத்திற்குரியவரென ஐநா பெயர்சொல்லிக் குறிப்பிட்டுள்ள முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அமர்த்தப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலையங்கள் (போர் தவிர்ப்பு வலையங்கள்) என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இந்தத் தளபதியின் கட்டளைத் தலைமையில்தான் குண்டுவீச்சும் எறிகணை வீச்சும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எலும்புக்கூடுகள் உட்பட சேகரித்த சான்றினைப் பத்திரமாக வைத்துகொள்ளச் சொல்லி சிறிலங்கா அரசாங்கத்திடமே விட்டுவைக்க அனுமதிப்பதும், அரசாங்கம் சான்றுகளை சிதைக்காமலோ அழிக்காமலோ வைத்திருக்கும் என்று எதிர்பார்ப்பதும் மிக மிக ஆபத்தானது. ஏராளமானோரைக் காணாமற்செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு சான்றுகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கோழிக் கூண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்றதே இது.

தமிழ்ப் பகுதிகளில் இதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டப் புதைகுழிகளுக்கு யாரும் பொறுப்புக்கூறுமாறு செய்யப்படவில்லை. எலும்புக்கூடுகள் உள்ளிட்ட சான்றுகளைப் பகுத்தாய்ந்து, அழியாமற்காக்கவும் இல்லை. இரு எடுத்துக்காட்டுகள் தரலாம்: 1998ஆம் ஆண்டு வடக்கு மாகாண நகரமான செம்மணியிலும், 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண நகரமான களுவாஞ்சிக்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டப் புதைகுழிகள் இப்படித்தான் ஆயின.

வடக்கு மாகாணம் மண்டைத்தீவு எனுமிடத்தில் மற்றொரு கூட்டப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டடிருப்பதாக அண்மையில் செய்திகள் வந்துள்ளன. ஆண்டுக் கணக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயிருப்பதை வைத்துப் பார்த்தால், தமிழ்ப் பகுதிகளில் மேலும் பல கூட்டப் புதைகுழிகள் இருக்குமோ என்ற கவலைகள் உள்ளன.

எலும்புக்கூடுகள் உட்பட சேகரிக்கப்படும் சான்றுகள் அனைத்தையும், புதைகுழி இடம்பெற்ற பகுதியையும் எதிர்காலப் பன்னாட்டு வழக்குத் தொடுப்புக்குச் சான்றாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பகுத்தாய்ந்து, அழியாமற்காத்திட ஆவண செய்யுங்கள்.

நீங்கள் ஈடுபாடு கொள்ளா விட்டால், இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் என்று கவலைப்படுகிறோம். மேலும், எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுத்துப் பகுத்தாயும் செயல்வழியையும், நீதிச் செயல்வழி உட்பட இதனோடு தொடர்புள்ள அனைத்துச் செயற்பாடுகளையும் நெருங்கிக் கண்காணிக்க ஒரு நோக்கரை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என அக்கோரிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Twitter: @TGTE_PM

ENGLISH: https://www.einnews.com/pr_news/475238347/un-rights-chief-urged-to-send-observers-to-the-mass-grave-found-in-sri-lanka-tgte

நாதம் ஊடகசேவை Transnational Government of Tamil Eelam TGTE +1 614-202-3377

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*