ஜனாதிபதி கோட்டாபயவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சவால்!
தனது பதவிக் காலத்தில் எவ்வடிவிலும் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய எவ்விதச் செயலுக்கும் இடமளிக்க மாட்டோம்.
இத்தகைய செயற்பாடுகளை எவ்வகையிலும் மன்னிக்க மாட்டோம் சூழுரைத்திருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு துணிவிருந்தால், றோம் அனைத்துலக சட்டத்துக்கு முன்திகதியிட்டு ஏற்பு வழங்கி, அனைத்துலக பொறுப்புக்கூறல் செயல்வழி இயங்க முதலில் இடமளிக்கட்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி 18ம் நாள் இலங்கை நாடாளுமன்றப் அமர்வின் தொடக்கத்தில் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரவிக்கையிலேயே மேற்குறித்த கூற்றினை தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் அரசாங்கம் எவ்வடிவிலும் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை என கோட்டாபயவின் கருத்துக்கு பதிலுரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், போரின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட குற்றங்கள் அமைப்புசார் குற்றங்களாகும் (Systemic crimes) என்று ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் அல்-உசைன் கூறியுள்ளார்.
போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கை அரசு அக்குற்றங்களைத் திட்டமிட்டு கொடூரமான முறையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில்தான் நிறைவேற்றியது. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்கும் பன்னாட்டுக் குற்றங்களுக்கும் ஆளுருவமாக ஓர் இனப்படுகொலையாளிhக இவர் இருக்கிறார்.
மேலும் தனதுரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை அறவே இருட்டிப்புச் செய்யப்பட்டிருப்பதானது, இலங்கையில் ஆழ வேரூன்றிய இனநாய அரச கட்டமைப்புக்கள், தமிழர்களுடன் எவ்வகை அரசியல் தீர்வுக்கு இடமில்லை என்ற உண்மையையே மீளுறுதி செய்துள்ளது.
‘மன்னார் மாவட்டத்துக்கு பாசன நீரும் குடிநீரும் வழங்குவதற்கான கீழ் மல்வாத்து ஓயா அணைத் திட்டம், ‘யாழ்ப்பாணத்துக்கு ஆறு’ திட்டத்தின் கீழ் புதிய நன்னீர் உப்பங்கழிகள் வளர்ச்சி ஆகியவை உட்பட பற்பலப் பெருவீதத் திட்டப் பணிகள் ‘கட்டுமான நிலையில்’ இருப்பதாகக்இலங்கை ஜனாதிபதி கூறியிருப்பதானது, தமிழர் நிலங்களை அபகரிப்பதற்கும், சிங்கள குடியேற்றங்கள் செய்வதற்கு சிங்கள இனவாதம் தனது பழைய இழிவான தந்திரங்களைப் பயன்படுத்த முனைகின்றது என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஏனெனில் தமிழ்ப் பகுதிகளிலும் மகாவெலித் திட்டம் என்ற பெயரில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதும், தெற்கிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதும் முக்கியமானது. தமிழர்களின் பாரப்பரிய இடமான மணலாறு, வெலி ஓயா என பெயர்மாற்றம் செய்யபட்டு ஆக்கிரமிக்கப்பட்டதும் முக்கியமானது.
‘தனது தேசம் அனைத்துலக சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் மதிக்கிறது. மனிதவுரிமைகள் தொடர்பாகக் கடந்த காலத்தில் அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள பிழையாண எண்ணங்களை சரிசெய்ய வேண்டும்.
பொறுப்புடன் சொல்லிக் கொள்கிறேன் தனது பதவிக் காலத்தில் எவ்வடிவிலும் மனிதவுரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய எவ்விதச் செயலுக்கும் இடமளிக்க மாட்டோம். இத்தகைய செயற்பாடுகளை எவ்வகையிலும் மன்னிக்க மாட்டோம்’ என கோத்தா தெரிவித்திருக்கின்றார்.
உண்மையைத்தான் இவர் சொல்கிறார் என்றால், இவருக்கு அறத் துணிவு இருக்குமானால் றோம் அனைத்துலக சட்டத்துக்கு முன்தேதியிட்டு ஏற்பு வழங்கிப் அனைத்துலக பொறுப்புக்கூறல் செயல்வழி இயங்க முதலில் இடமளிக்கட்டும்.
இலங்கை ஜனாதிபதிக்கு ஒன்றினை நினைவுபடுத்த விரும்புகின்றேன், தாங்கள் இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலராகப் பதவி வகித்த காலத்தில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் இழைக்கப்பட்டன என்பதற்கு நம்பகமான சான்றுகள் இருப்பதாக ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையும், ஐ.நா உள்ளக ஆய்வறிக்கையும் கூறியுள்ளன.
மேலும் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கோட்டாபய ராஜபக்ச தலைமை வகித்த போரின் இறுதிக் கட்டங்களில் இனவழிப்புக் குற்றம் இழைக்கப்பட்டது என்று கூறி இருக்கின்றது.
உண்மையில் இந்த சர்வதேசக் குற்றங்களுக்கு நீதியினையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தியே, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசேல் பசலே அம்மையார் அவர்கள், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தும்படிப் பரிந்துரைத்தார்.
அவரது அழைப்புக்கு ஐ.நாவின் முன்னாள் ஆணையார்கள், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.