சுதந்திர தமிழீழம் என்பது இந்தியாவின் நலனிலேயே உள்ளது – உருத்திரகுமாரன் வலியுறுத்தல்

Link:https://www.einpresswire.com/article/645251277/

NEWS PROVIDED BY Visuvanathan Rudrakumaran, Transnational Government of Tamil Eelam (TGTE) July 23, 2023, 21:04 GMT SHARE THIS ARTICLE

“சர்வதேச அனுசரணையுடனான ஒரு வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அதற்கு இந்தியாவே தலைமைதாங்க வேண்டும்.”

கடந்தகால இந்திய இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக, 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் – இந்தியாவின் பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.”— ஐ.நா.வின் அறிக்கைCHENNAI, INDIA, July 23, 2023/EINPresswire.com/ —

சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் நலனில் உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சர்வதேச அனுசரணையுடனான ஒரு வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்கு இந்தியாவே தலைமைதாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும், இதுவரை 13வது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

கடந்தகால இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக 300,000இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும் போலித்தனத்தையும் பயன்படுத்துகின்றது.

இந்தநிலையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம். எனவே 13வது திருத்தக்கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம்:

மேலும் சுதந்திர அரசிற்கு அமைதியான முறையில் குரல் கொடுப்பதைக் கூட தடைசெய்யும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் காரணமாக, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும் உருத்திரகுமாரனின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது. இறுதி முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழ் மக்களே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசத்தின் இறையாண்மை ஒவ்வொரு தமிழனிடமும் உள்ளது.எனவே, இந்தப் பன்மைத்துவத்தைப் போற்றும் வகையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான சரியான தீர்மானம் ஈழத் தமிழர்களிடையே இந்தியாவால் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு மாத்திரமே என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை:

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே என்பதை வெளிப்படையாக்கும்.

இது 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் உள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கைத் தலைவர்கள் பலர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், 13வது திருத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் மகாவம்ச சிந்தனையுடன் இணைந்து, 13வது திருத்தத்தை சிங்கள அரசியல் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

இந்தியாவின் அரசியல் செல்வாக்கு:

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் இலங்கையை தக்கவைக்க, தொடர்ந்து சலுகைகளை அளித்து வருவதை உருத்திரகுமாரனின் அறிக்கை மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.

1) 1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர், உகண்டாவிலிருந்து இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியது போன்றது. இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

2) 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு சிறீமா-இந்திரா கடல் எல்லை ஒப்பந்தத்தின் விளைவாக, ராமநாட்டு ராஜாவின் ஜமீன்தாரியின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவை விட்டுக்கொடுத்து, தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உணவு உரிமைகளை இலங்கைக்கு தியாகம் செய்தது என்ற இரண்டு விடயங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைகளாக ருத்திரகுமாரன் கோடிட்டுள்ளார் .

சிங்களக் குடியேற்றங்கள்:

இந்தநிலையில் சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது, மற்றும் ஆபத்தானது என அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் போது, தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 1.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

இன்று கிழக்கு மாகாணத்தில் 29சதவீத சிங்களவர்கள் உள்ளனர் என்பதையும் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org Visuvanathan Rudrakumaran Transnational Government of Tamil Eelam (TGTE) +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter Instagram Other

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*