மாவீரர்கள் எம்மோடு வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளீகரம் செய்யமுடியாது – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
November 27, 2024
காலாதி காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் தேசத்தின் அடிமை விலங்கை உடைத்து, நம் தாயகமெங்கும் சுதந்திரத் தீயினை ஏற்றும் நெருப்பு வேள்வியில் விதையாய் வீழ்ந்து பரந்திருக்கும் நம் வீரர்களின் பெருநாளே தமிழீழத் தேசிய மாவீரர் நாள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழ் மக்கள் தேசிய விடுதலையையும் சமூக விடுதலையையும் அடைந்த மக்களாக, சமூகநீதியும் சுற்றுச் சூழல் நீதியும் நிலவும் ஒரு பண்பட்ட சமூகத்தில் வாழ வேண்டுமென்ற இலட்சியக் கனவோடு களமாடிய எமது மாவீரர்களை நாம் இதயக் கோவிலில் வைத்துப் பூசிக்கும் நன்நாள்.
மாவீரர்கள் சுவாசித்த மூச்சுக்காற்று நம் தேசமெங்கும் நிறைந்திருக்கிறது. அவர்களின் காலடித் தடங்கள் நம் தேசமெங்கும் பரந்திருக்கின்றன.
அவர்கள் விதையாக வீழ்ந்த நம் மண் தனது விடிவுக்காக காத்திருக்கிறது. காலத்தால் அழியாத நித்தியத் தேட்டமாக மாவீரர்கள் நம் தேசத்தின் ஆன்மாவில் உறைந்திருக்கிறார்கள்.
நமது மாவீரர்கள் தமது ஈகத்தின் மூலம் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அனைத்துலகப் பரிமாணம் வழங்கியுள்ளனர்.
நமது தேசத்தின் இருப்பை, எம் மக்களின் அரசியல் பெருவிருப்பை, இவ் இலட்சியத்தை அடைந்து கொள்ள சுதந்திர வேட்கையுடன் நமது போராளிகள் கடந்து சென்ற நெருப்பாற்றை, மனிதகுல வரலாற்றில் வெளிப்பட்ட அதியுச்ச ஈக வரலாற்றை வரலாற்றின் பக்கங்களில் எமது மாவீரர்கள் பதிந்துள்ளனர்
நம் மாவீரர் நினைவுகள் தமிழர் தேசத்தின் கூட்டு நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.
மாவீரர்கள் நினைவில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உருகும் இந் நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலை சாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத புதியதொரு சூழலை தற்போது எதிர்கொள்கிறோம்.
நமது மாவீரர்கள் தமது ஈகப்பிணைப்பால் ஈழத் தமிழர் தேச நிர்மாணத்தை வலுப்படுத்தி, ஈழத் தமிழ் மக்களை அரசமைக்கப் போராடும் ஒரு தேசம் என உலகின் கண்களின் முன் நிறுத்தினர்.
இறைமையும் சுதந்திரமும் கொண்ட சுதந்திரத் தமிழீழ அரசை அமைப்பதற்கு நமது மாவீரர் நடத்திய போராட்டம் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்பதற்காக அல்ல.
மாறாக, சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பே கேள்விக்கு உள்ளாகியிருந்த நிலையில், தமிழினமே இனவழிப்பை எதிர் கொண்டிருந்ததொரு நிலையில், தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழ் மக்களுக்கென தனியரசு அமைதல் அவசியம் என வரலாறு காட்டிய வழி நின்றே நமது மாவீரர்கள் போராடினர்.
தமிழீழத் தனியரசு அமைக்க நமது மாவீரர்கள் போராட வேண்டியதொரு நிலையை சிறிலங்காவின் எந்த அரச கட்டமைப்பு உருவாக்கியதோ, அதே கட்டமைப்புத்தான் இப்போதும் இருக்கிறது.
காலம்காலமாக மாற்றங்கள் ஆட்சியாளர்களில் ஏற்பட்டிருகின்றனவேயன்றி சிங்கள பௌத்த மேலாதிக்க அரச கட்டமைப்பில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, அரச கட்டமைப்பு மறுசீரமைக்க முடியாத அளவுக்கு இறுகிப் போயும் உள்ளது.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் நிர்வாக நடைமுறை அதிகாரக் கட்டமைப்பும் சிங்கள மேலாதிக்கம் கொண்டதாக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் நிலையும் இதுதான். நீதித்துறையும் இதன் பாற்பட்டதே.
பல் தேசிய இனங்கள் கோண்ட எந்தவொரு நாட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசிய இனம், ஏனைய தேசிய இனங்கள் மீது ஜனநாயகத்தேர்தல் முறையூடாகத் தனது முடிவுகளைத் திணிக்க முடிகிறதோ, அங்கு நிலவுவது இனநாயகமேயன்றி ஜனநாயகம் அல்ல.
இந்த வகையில் இலங்கைத்தீவில் இப்போது நிலவுவது இனநாயகமேயன்றி. ஜனநாயகம் அல்ல.
இவ்வாறு இனநாயகம் நிலவும் நாடுகளில் அரசு, எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனங்களை அங்கீகரிக்காது, தான் பிரிநிதித்துவப்படுத்தும் தேசிய இனத்தின் முடிவுகளுக்கு ஏனைய தேசிய இனங்களை உட்படுத்தி அவற்றை பெரும்பான்மையுடன் இணைக்க முயன்றால், அது ஏனைய இனங்களை கருவறைக்கச் செய்யும் நடவடிக்கையாக அமையும்.
இந்த அர்த்தத்தில் நாம் Genocide எனும் பதத்துக்கு இனக்கருவறுப்பு எனப் பயன்படுத்துவது கூடுதல் அர்த்தம் கொண்டது போல் தெரிகிறது. எமது கடந்தகால வரலாற்று அறிவின் படி சிறிலங்கா அரசு தமிழ் மக்களை இனக்கருவறுப்புச் செய்வதை தனது நீண்டகாலத் திட்டமாகக் கொண்டுள்ளது என்பதை எம்மால் உணர முடிந்தது
இந் நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து மாயவித்தைகள் புரியப் போகிறது என கிளம்பியிருக்கும் கதையாடல்கள் நடைமுறையில் நீண்ட காலம் நீடித்து நிலைக்கப் போவதில்லை.
ஓர் அரசு என்பது தனித்த ஒரு பொறிமுறை அல்ல. அது அரசுகள் என்ற முறைமையின் ஒரு பகுதி.
அதுவும் இலங்கை போன்ற சிறிய நாடு ஒன்றின் அரசுக்கு, அரசு என்ற முறைமைக்குள் பூகோள அரசியல், புவிசார் அரசியலை கையாள்வதில் பல்வேறு சவால்கள் எழும்.
மேலும் ஒரு கட்சியை நடத்துவது வேறு. அரசை நடத்துவது வேறு. தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு வாக்குறுதிகள் கட்சி நிலைப்பாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.
இனி அரசாக இவர்கள் இயங்கும் போது எழக்கூடிய சவால்கள், இவர்களின் கட்சிக்கும் அரசுக்குமிடையே எழக்கூடிய பதட்டங்கள், இவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் – இவை எல்லாவற்றையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்களின் பெறுபேற்றை மதிப்பீடு செய்ய சில வருடங்களாவது தேவைப்படும்.
நாம் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு எமக்குக் கற்றுத்தந்த பாடங்களை நாம் தேசியத் தலைவர் கூறியதைப் போல வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தியின் கரங்கள் கறை படிந்தவை.
இன்று உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உடன் படும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, அன்று சுனாமிப் பேரலை அவலத்தால் ஏற்பட்ட பெருந்துயர் துடைக்க ஏற்படுத்தப்பட்ட சுனாமிப் பொதுக்கட்டாமைப்பு (P-Toms) உடன்பாட்டை சட்டப் போராட்டம் நடத்தி முறியடித்தவர்கள்.
இணைந்திருந்த வட- கிழக்கு மாகாணங்களை நீதிமன்று ஊடாகப் பிரித்து வைத்தவர்கள். இறுதிவரை போர் நடத்த வேண்டும் என வற்புறுத்தி இராணுவத்தில் 60,000 க்கும் மேற்பட்டவர்களை இணைத்து விட்டவர்கள். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு இவர்களும் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.
இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைந்த கடந்த காலம் குறித்து இவர்கள் பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்ததில்லை. தமிழ் மக்களிடம் மன்னிப்பும் கோரியதில்லை.
கடந்த காலத்தில் தாம் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகள் குறித்துப் பகிரங்கமாகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதைத் தடுப்பது என்ன?
தமது கொள்கை வழிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏன் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உறுதியா? அல்லது எவ்வாறு மன்னிப்புக் கோருவது என்ற தடுமாற்றமா? அல்லது இன்று காட்டும் முகம் அரசியல் சந்தர்ப்பவாதமா?
கடந்த காலங்களில் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்கள் நடத்தும் போது, பேசப்பட வேண்டிய விடயங்கள் உடனடிப் பிரச்சினைகள், அடிப்படைப் பிரச்சினைகள் எனப் பாகு படுத்தப்பட்டன.
ஓப்பீட்டளவில், உடனடிப் பிரச்சினைகள் தீர்வு காணப்படுவது குறித்துப் பேச்சுக்களில் இணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் வருவதுண்டு. சில விடயங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதுமுண்டு.
ஆனால், இன்றுவரை அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஒரு சாண் அளவுகூட முன்னேற்றம் ஏற்பட்டதில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியற் தலைமையாக இருந்த காலத்தில் தீர்வு காணப்படுவதற்கு முடியாமல் இருப்பதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பே காரணம் என சிறிலங்கா அரசும், அனைத்துலக சமூகமும் குற்றம் சுமத்தினர்.
ஆனால், இன்று 15 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாறாக, புலிகள் அமைப்பு இருந்த போது இருந்த போராட்ட அழுத்தம் வலுவிழந்த பின்னர் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அழுத்தம் சிறிலங்கா அரசுக்கு குறைவடைய இன்று தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறநு என்பதனை உதாசீனம் செய்து விட்டு கடந்து செல்ல முயல்கின்றனர்.
உண்மை என்னவெனில், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் வெளி பேரினவாதத்தால் இறுகிப்போயிருக்கும் தென்னிலங்கை அரசியல் சமூகத்தில் இல்லை; தீர்வு காணக் கூடிய அரசியற் பண்பாடு தென்னிலங்கையில் இல்லை., இதற்கான அரசியற் பெருவிருப்பும் இல்லை.
இத்தகைய ஒரு பண்பாடும் மனப்பாங்கும் மகாவம்ச மனநிலையில் இருந்து வளர்ந்து வந்ததாக பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
2009 ஆம் ஆண்டின் பின் ஒவ்வொரு தடவையும் தேர்தல் நடந்து ஆட்சிமாற்றம் நடைபெறும் போது புதிய யாப்பின் ஊடாகப் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்படும் என்பார்கள். இது குறித்த ஆரவாரங்களும் நடைபெறும்.
நமது தமிழ்த் தலைவர்கள் பலரும் இதன் பின்னால் ஒடுவார்கள். மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பார்கள். தமிழ்த்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம் யாப்பில் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகள், அதிகாரங்கள் உறுதி செய்ய்ப்படாமை என்பதல்ல. உரிமைகள், அதிகாரங்கள் யாப்பில் உறுதி செய்யப்பட்டாலும் அவற்றை அமுல் நடத்துவதற்கான அரசியல் வெளி நான் ஏற்கனவே குறிப்பிட்ட இறுகிப்போன சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பில் இடம் இல்லை என்பதே ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமுல் நடத்தப்படாமல் இருக்கும் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் உதாரணமாகும்.
மீண்டும் ஓர் ஆட்சிமாற்றம் வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் புதிய யாப்புப் பற்றிப் பேசுகிறார்கள்.
இதேவேளை. தேசியப் பிரச்சினை என்று ஒன்று உண்டு; அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக தம்மை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
உண்மையில், தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக இவர்கள் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்களா? தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இவர்களின் நிலைப்பாடு என்ன?
இது தொடர்பாகக் கூர்ந்து அவதானிக்கும் போது, இவர்கள் சமத்துவம் போல் முன்வைக்கும் கருத்துக்கள் ஈழத் தமிழர் தேசத்தை ஆபத்துக்குள் சிக்க வைக்கும் பொறி இவர்களிடம் உண்டு என்ற சமிக்ஞையைக் காட்டுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர தேசிய இனப்பிரச்சினையை தொடர்பாக. தேசிய இனங்களின் இருப்பையும், அவற்றின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் அது இலங்கைக்குப் பொருந்தாது என நிராகரித்து, இறுக்கமான ஒற்றையாட்சியின் கீழ் அனைவரையும் சமமாக நடத்தும் அணுகுமுறையை முன்வைத்தார்.
தேசிய இனங்கள் தொடர்பாக லெலின் வைத்த நிலைப்பாட்டை அது காலனித்துவ காலத்துக்குரியது எனக்கூறி நிராகரித்தார்.
இன்றைய தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறையும் ரோகன விஐயவீர முன்வைத்த நிலைப்பாட்டை ஒத்ததாகவே உள்ளது போல் தெரிகிறது.
இவர்களது ஒற்றையாட்சி நிலைப்பாடே, தமது புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் போது, இனநாயகம் நிலவும் இந் நாட்டில் பேரினவாத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியாக அது அமையும்.
இத் தடவை தமிழ் மக்களது ஆதரவும் தமக்கு உள்ளது என்று கூறி பேரினவாத மேலாதிக்கத்தை நியாயப்படுத்த இவர்கள் முனையக்கூடும்.
நமது ஈழத் தமிழர் தேசம் மாவீரர்களால் காவல் செய்யப்படுகின்ற ஒரு தேசம். இங்கு சிங்களத் தேசியக் கட்சிகள் வெவ்வேறு முகங்களோடு உள் நுழையலாம். ஆனால். நீடித்து நிலைத்து நிற்க முடியாது.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பலவீனங்கள் காரணமாக மக்களுடனான உறவில் இடைவெளி ஏற்படும் போது ஊழல் ஒழிப்பு என்பது கவர்ச்சிக்குரியதாகத் தோன்றலாம். தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தக் கூடும்.
ஆனால், தமிழ் மக்களின் கூட்டுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இனக்கருவறுப்பு ஆபத்து நீங்குவதற்கோ இவ் ஆட்சி மாற்றம் துணை செய்யப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் எச்சரிக்கையுணர்வுடன் எமது ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைத்தல் அவசியம்.
நாம் எதிர்கால நன்மை கருதி எமக்குத் தீங்கிழைத்தவர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரின் அவர்களை மன்னிக்கும் மனிதத் தன்மை கொண்டவர்களாக நாம் இருக்கலாம்.
ஆனால், நடந்தவையெல்லாவற்றையும் மறந்து செயற்படும் வரலாற்றுத் தவறை நாம் செய்ய முடியாது. நாம் அவ்வாறு செய்வோமாக இருந்தால் எமது மாவீரர்களே எம்மை மன்னிக்க மாட்டார்கள்.
இன்றைய மாவீரர் நாளில் எதிர்கால நன்மை கருதி ஒரு கருத்தை நாம் இன்றைய ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி நோக்கி முன் வைக்கிறோம்.
நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையையும், அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தையும் நீக்கி, ஜனநாயக வழியில், கருத்துச் சுதந்திரத்துடன் ஈழத் தமிழ் தேசப்பற்றாளர்கள் அரசியற் செயற்பாடுகளை செய்வதற்குரிய சூழலை உருவாக்குங்கள்.
ஒன்றுக்கு இரண்டு தடவை ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட உங்கள் மீதான தடை அகற்றப்பட்டு, நீங்கள் நீண்ட நெடுநாட்கள் சுதந்திரமாக அரசியல் செய்ய வழிவகை செய்யப்படவில்லையா?
இவ் விடயத்தில் உங்களுக்கு ஒரு நியாயம்; தமிழர் போராட்ட அமைப்புக்கு ஒரு நியாயம் என்றால் அதனை இனப்பாகுபாடு என்று அல்லாமல் வேறு எவ்வகையில் நாம் புரிந்து கொள்ள முடியும்?
உங்கள் ஆட்சியில், அணுகுமுறையில் தமிழ் மக்கள் போராட வேண்டிய அவசியம் வராது என்று தமிழ் மக்கள் மத்தியில் கருத்துரைக்கிறீர்கள்.
நீங்கள் கூறுவதில் உங்களுக்கு உண்மையில் நம்பிக்கை இருக்குமானால் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கி சுதந்திரமான அரசியற் செயற்பாட்டுச் சூழலை உருவாக்க நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்?
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கத் தமிழீழத் தனியரசு உட்பட ஏனைய தீர்வு முறைகளையும் முன்வைத்து தமிழர் தாயகத்திலும் தமிழ் டயாஸ்பொறா மத்தியிலும் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். அதில் தேவையெனில் ஒற்றையாட்சித் தெரிவையும் உள்ளடக்குங்கள்.
உங்கள் மீது தமிழ் மக்கள் உண்மையில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை ஒற்றையாட்சித் தெரிவை தமிழ் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனில் அப்போது நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ் மக்கள் மீது நீங்களும் சேர்ந்து ஏவிய கொடும் போரின் மூலம் அவர்களின் முதுகெலும்பை உடைத்து, மக்களுக்குரிய ஜனநாயக வெளியை மூடி வைத்துக் கொண்டு செய்யும் அரசியல் ஒர் ஒடுக்குமுறை அரசியல் அல்லவா! இதில் பெருமை வேறு கொள்வது அரசியல் அபத்தம் அல்லவா!
மாவீரர்கள் எம்மோடு வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளீகரம் செய்து விட முடியாது. அவர்களின் மூச்சுக்காற்று அதனை அனுமதிக்காது. இதனை நாம் நம்புவோம்.
மாவீரர்களின் பெற்றோர்களே, உறவுகளே, எங்கள் மாவீரர் ஈகம் என்றும் வீண் போகாது. ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் உயிர்த்தெழும் தீரமிக்க விதைகள் போல மாவீரர் கனவுகள் நிச்சயம் நனவாகும். இதனையும் நாம் நம்புவோம்.
மாவீரர்கள் எமக்குத் தரும் உத்வேகத்துடன் ஒவ்வொரு காலடியாக முன்னோக்கி வைத்து இலக்கு நோக்கிப் பயணிப்போமாக என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது